Wednesday 9 May 2018

தேஜஸ்

தேஜஸ்

தேஜஸ் என்பது சக்தி சேகரித்துக்கொள்வது. எந்த மனது ஓய்வெடுத்து சக்தியை சேகரித்து கொள்கிறதோ அதற்கு இந்த உலகில் தேஜஸ் கிடைக்கிறது. அப்போது அது பேசும்போது அது கவிதையாகிறது, அது போதனையாகிறது. அது சொல்லும் விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் தர்க்கமும் தர தேவையில்லை. மக்களுக்கு புரிய அதன் சக்தி மட்டுமே போதும். மக்களால் அது இதுதான் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் இது ஏதோ ஒன்று என்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அதைதான் அவர்கள் தேஜஸ் என்றழைகின்றனர்.

முதன் முறையாக நான் தேஜஸ் என்றால் என்ன என்று உங்களிடம் கூறியிருக்கிறேன். நான் இதை அனுபவத்தின் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். இரவும் பகலும் வேலை செய்துகொண்டே இருக்கும் மனது வலிமையற்றதாக, சோர்வாக, இழுபறியோடுதான் இருக்கமுடியும். அது பயன்படும். அவ்வளவுதான். நீ காய்கறி வாங்கப் போகலாம். அது பயனுள்ளதாக இருக்கும். அதற்குமேல் அதற்கு சக்தி இருக்காது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் ஆணித்தரமின்றி, தேஜஸ் வலிமையின்றி, சொல்லாற்றல் இன்றி இருக்கிறார்கள்.

மனதை மௌனத்தில் வைத்து அது தேவைப்படும்போது மட்டும் உபயோகப்படுத்த முடிந்தால் – அது சாத்தியம்தான் – அப்போது அது வீரியத்தோடு வெளிப்படும். அது மிக அதிக சக்தியை பெற்றிருப்பதால் அதன் வார்த்தைகள் இதயத்தை ஊடுருவும். தேஜஸ் பெற்றவர்கள் மற்றவர்களை மனோவசியம் செய்து விடுவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. அவர்கள் வசியம் செய்வதில்லை. அவர்கள் மிகவும் புத்துணர்வோடும், இளமையோடும் இருப்பதால் அப்படி நிகழ்கிறது. இது மனதிற்கு நிகழ்வது.

இருப்பில் இந்த அமைதி ஒரு அழிவற்றதை, ஒரு நிலையான பிரபஞ்சத்தை நீ ஒரு வரமாக நினைக்கும் ஒரு விஷயத்தை உன்னுள் திறக்கிறது. அதனால் தியானம்தான் மிகத்தேவையான மதம், ஒரே மதம் என்று நான் வலியுறுத்துகிறேன்.  வேறு எதுவும் தேவையில்லை. மற்ற எல்லாமே தேவையற்ற சடங்குகள்தான்.

தியானம் தான் அடிப்படை, மிக அடிப்படையானது. தியானம் உன் உள்ளிருப்பின் உலகத்தில் மிகவும் வளமையை உருவாக்கித் தரும். அதோடு உன்னுடைய திறன்களை உன்னுடைய மனதின் மூலமாக வெளிப்படுத்தும் சக்தியை பெற்றுத் தரும். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட விதமான திறனுடன்தான் பிறக்கிறார்கள். அவன் தனது திறனை முழுமையாக வாழ்ந்தால் தவிர அவனுள் ஏதோ ஒன்று குறையாகவே இருக்கும். ஏதோ ஒன்று. மனதுக்கு ஓய்வு கொடு. அதற்கு அது தேவை. அது மிகவும் எளிது. அதற்கு ஒரு சாட்சியாக இரு. அது உனக்கு பல விஷயங்களை கொடுக்கும்.

மெதுமெதுவாக மனம் மௌனமாக இருக்க கற்றுக் கொள்ளும். ஒருமுறை அமைதியாக இருக்க அது கற்றுக் கொண்டு விட்டால் பின் அது மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். பின் அதன் வார்த்தைகள் வார்த்தைகள் அல்ல. முன் எப்போதும் இல்லாத ஒரு தன்மை அதில் இருக்கும். அது சரியானதாகவும் வளமானதாகவும் இருக்கும். அவை ஒரு அம்பு போல துளைத்துக் கொண்டு போகும். அது எல்லா தடைகளையும் கடந்து இதயத்தை சென்றடையும்.பின் மனமானது மௌனத்தின் மூலம் அளப்பரிய ஆற்றல் பெற்ற ஒரு வேலையாள் ஆகும். அதன் பின் இருப்பு முதலாளியாகும். அதற்கு தேவைப்படும்போது மனதை உபயோகிக்கவும், தேவைப்படாத போது மனதின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவும் முடியும்.

- ஓஷோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.