Friday 17 March 2017

தியானம்

*தியானம் என்றால் என்ன?*

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம்.
அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல
முடியாத இயலாமை.

ஒருநாள் மூவரும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது, சிறுவன் பகவானை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான்.

*தியானம் என்றால் என்ன?*
பகவான்: சிரித்துக் கொண்டே அந்தச்
சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.

சிறுவனிடம்,
*"நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும்.*

அதே மாதிரி
*எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது.* புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம்.

சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.

சிறுவன் *மகர்ஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒருகையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்.*

சிறுவனைச்
சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் பகவான்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன்
பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே
மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

ரமணர் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை.
தோசையோ சிறுத்து ஒரு சிறு
விள்ளலாக மாறியிருந்தது இப்போது.
சிறுவனும் அந்த விள்ளலில் கையை
வைத்தபடி
எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான்.

சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.

*எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.*

*"இரண்டு 'ம்' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ,*
அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும்,

அடிநாதமாக *இறைவன் மேல்*
*கவனம் வைத்திருப்பாயானால் அதன் பெயர் தியானம்.*

புரிந்ததா இப்போ?" என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.
கதை முடிந்தது.

*பகவான் ஸ்ரீ ரமணர் சொன்ன இரண்டு 'ம்' கள்* வாழ்வும்,
சாவும் எனவும்,

இடைப்பட்ட காலத்தின் நேரமே தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதை
புரிந்து கொள்ளவேண்டும்.  அதில் பக்குவமுறும் காலமே வேறுபடுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.