*🔯 சிறப்பு வாய்ந்த ஆடி செவ்வாய் வழிபாடு*
*🔯ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்ல, ஆடி செவ்வாய் கிழமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது.*
ஆடி செவ்வாயில் அம்மன் உள்ளிட்ட சகல பெந்தெய்வங்கள், முருகன் வழிபாட்டுக்கு உகந்தது என புராணங்கள் சொல்கிறது.
முருகப்பெருமானை வழிபட்டு விரதமிருக்க விரும்பினால் அந்த முருக பெருமானுக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களை பாடி வணங்கி, பின்பு அருகிலுள்ள முருகப்பெருமான் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று வணங்க வேண்டும். இந்த ஆடி செவ்வாய்களில் இப்படி விரதமிருந்து வழிபடுவதால் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் நீங்கும்.
இந்த ஆடி செவ்வாய்களில் அம்மனுக்கு விரதமிருப்பவர்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிய பின் அம்மனுக்குரிய மந்திரங்களை கூறி வணங்கி, பிறகு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும்.
இதனால் ஆரோக்கியம் மேம்படும், திருமணம் புத்திர பேறு கிட்டும். கடன்கள் தீரும். பதினாறு பேறும் கிட்டும்.
ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.
அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 13)அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள்.
செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பது விசேஷ பலன்களை தரும்.
ஆடி செவ்வாய்கிழமைகளில் அன்னதானம் செய்தால், மற்ற நாட்களில் செய்வதைவிட பல மடங்கு அதிக பலன்கள் கிடைக்கும்.
செவ்வாய் கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஆடி செவ்வாய் அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று, செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும்.
நைவேத்தியத்திற்கு சிவப்பு நிற பழங்களை படைப்பது சிறந்தது. காலையில் அம்மனையும் , மாலையில் முருகனையும் வணங்குவது சிறப்பு.
செவ்வாய் தோசம் உள்ளவர்கள் துவரை தானம் செய்யலாம்.
சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
செம்பவள மோதிரமோ அல்லது கழுத்து சங்கிலியில் செம்பவளம் பதித்த டாலர்களை அணிவது கூடுதல் பலனை தரும்.
ஆடி செவ்வாயில் விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிட்டும். ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
கடைசி ஆடிச்செவ்வாய் அன்று கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள் முறைப்படி வருடத்திற்கு ஒருவராக முன் நின்று, கிராமத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களைத் தெய்வமாக வழிபட்டு வடை, பாயாசத்துடன் விருந்தளிப்பர்.
சிலர் புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுடன் அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், காசு வைத்துக் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. காலத்தின் மாற்றங்களினால் இத்திருவிழா அநேக இடங்களில் கொண்டாடப்படாமல் நின்று விட்டது. சில கிராமங்களில் மட்டும் இதை மறைய விடாமல் பெரியோர்கள் நடத்தி வருகிறார்கள்.
ஆடிசெவ்வாய் விரதமிருந்து முருகனை, அம்மனை வழிபட்டு வாழ்வில் வளம்பெறுவோம்.