ஒரு நாளை எப்படி தொடங்க வேண்டும்? சூரிய வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்? ஓஷோ கூறும் வழிமுறைகளை இங்கே பார்ப்போமா?
அதிகாலையில் எழுந்து, குளித்து சூரிய உதயத்திற்காக காத்திருங்கள். சூரிய உதயத்தின் போது உங்கள் மனதில் தோன்றும் வார்த்தைகளை சொல்லுங்கள். எதுவும் தோன்றவில்லையா? அமைதியாக சூரிய உதய அழகை ரசித்திடுங்கள்.
சுலோகங்கள், பக்திப்பாடல்கள் மட்டுமே சொல்லவேண்டும் என்ற நிர்பந்தம் எதுவுமில்லை. அக்கணத்தில் உங்களுள் தோன்றுவதைச் செய்திடுங்கள். அது சகமனிதனுக்கு சொல்லும் காலை வணக்கமோ, கைகூப்பி வணங்குவதோ, கீழே அமர்ந்து நிலத்தைத் தொடுவதோ, ஆடுவதோ, பாடுவதோ, சூரியனுடன் உறையாடுவதோ அல்லது சூரியன் சொல்வதைக் கேட்பதோ, இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படிச் செய்யவேண்டும், அப்படிச் செய்யவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடாதீர்கள். அவ்வாறு செய்வதால் அக்கணத்தில் தோன்றக்கூடிய புதிய எண்ணங்கள் தடைபடலாம்.
இவ்வாறு தினமும் செய்வதால் உங்களுள்ளே மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திடக் காண்பீர்கள். ஒவ்வொரு நாளும் உற்சாகமளிக்கக் கூடிய பல வகையான எண்ணங்கள் உங்களுள்ளே தோன்றிடக் காண்பீர்கள்.
மேலும், நாள் முழுவதும் புத்துணர்ச்சிமிக்க மனநிலையைப் பெறுவீர்கள். ஒவ்வொரு நொடியும் வாழப் பழகுவீர்கள். அடுத்த நாள் விடியலை ஆர்வமுடன் எதிர்கொள்ளத் தொடங்குவீர்கள்.
பறவைகளின் இனிமையான அறைகூவல்கள், சூரிய உதயத்தின் போது நிகழும் வண்ணக்கோலங்கள், கூட்டமாக பறக்கும் பறவைகள், இதுபோன்ற அற்புதமான சிறு சிறு இன்பங்களை அனுபவிப்பீர்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் இப்பயிற்சி.